ஒருசமயம் மழை அதிகமாக பெய்தபோது பக்தர்களின் பிரார்த்தனைக்கிணங்க பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை இந்த ஸ்தலத்தில் மாடங்கள் போல் ஒன்று கூடி மழையைத் தடுத்துவிட்டன. மேகங்கள் ஒன்று கூடியதால் இந்த ஸ்தலம் 'திருக்கூடல்' என்னும் பெயர் ஏற்பட்டதாக ஐதீகம்.
மூலவர் கூடலழகர் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு மதுரவல்லி என்பது திருநாமம். மூன்று அடுக்குக் கோயில். இரண்டாவது தட்டில் பள்ளிக்கொண்ட பெருமாள் சயனத் திருக்கோலத்திலும், மூன்றாவது தட்டில் சூர்ய நாராயணன் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருகின்றனர். பிருகு முனிவர், பெரியாழ்வார் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
கிரேதாயுகத்தில் பிரம்மதேவரின் மகள், பெருமாளை அர்ச்சா ரூபத்தில் வழிபடுவதற்காக இந்தக் கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. திரேதாயுகத்தில் பிருது என்ற மன்னனும், துவாபரயுகத்தில் அம்பரிஷன் என்ற மன்னனும், கலியுகத்தில் புரூரவன் என்ற மன்னனும் இங்கு வந்து வழிபட்டு மோட்சமடைந்தனர்.
திருமங்கையாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் தலா 1 பாசுரம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|